எங்களுக்காகப் போராடவில்லை, மக்களுக்காகப் போராடுகிறோம் : அரவிந்த் கெஜ்ரிவால்
நாங்கள் பொதுமக்களுக்காக போராடுகிறோம், டெல்லி மக்களுக்கான பொது சேவையை தடை செய்தவர்களுக்கு எதிராக போராடுகிறோம் என கெஜ்ரிவால் குறிப்பிட்டு உள்ளார்.
டெல்லியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரியும், வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டும் துணை முதல்–மந்திரி மணிஷ் சிசோடியா, மந்திரிகள் கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோருடன் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 11–ந் தேதி மாலையில் துணைநிலை கவர்னரை சந்திக்க சென்றார்.
ஆனால் இந்த குழுவினரை துணைநிலை கவர்னர் அனில் பைஜால் சந்திக்கவில்லை. இதனால் துணைநிலை கவர்னர் மாளிகையின் வரவேற்பறையிலேயே 11–ந் தேதி மாலை 5.30 மணியில் இருந்து கெஜ்ரிவால் மற்றும் குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் துணைநிலை கவர்னர் மாளிகையிலேயே மந்திரி சத்யேந்தர் ஜெயின் நேற்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினார். அதன் தொடர்ச்சியாக முதல் துணை முதல்–மந்திரி மணிஷ் சிசோடியாவும் அங்கேயே காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதற்கு, மத்திய அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கருவியாக பயன்படுத்துவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி மேற்கொண்டனர்.
துணை நிலை ஆளுநர் அலுவலகத்திலிருந்து வீடியோ மூலம் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், எங்களுக்காக நாங்கள் போராடவில்லை, மக்களுக்காகவே போராடுகிறோம். பள்ளிகளுக்காக, தண்ணீருக்காக, கிளினிக்குகளுக்காக, நாங்கள் போராடுகிறோம். வாக்களித்த டெல்லி மக்களுக்கு இந்த வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போராடுகிறோம் என கூறியுள்ளார். பாரதீய ஜனதாவில் இருந்து விலகிய யஷ்வந்த் சின்ஹாவும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவை தெரிவித்து உள்ளார். “வாஜ்பாய் இன்று பிரதமராக இருந்து இருந்தால் மத்திய உள்துறை அமைச்சரையே டெல்லி முதல்வருடன் அமர்ந்து தீர்வு காணுமாறு உத்தரவிட்டிருப்பார்” என விமர்சனம் செய்து உள்ளார்.