ஊழல் வழக்கில் ஜாமினில் இருக்கும் தாய் – மகன் உள்ளிட்ட சிலர் பாஜகவை கேள்வி கேட்பதாக பிரதமர் மோடி விமர்சித்தார்.
சத்தீஸ்கரில் தற்போது ஆட்சி செய்து வரும் பாஜக அரசின் பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைவதையொட்டி, அந்த மாநில சட்டப் பேரவைக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளுக்கு நவம்பர் 12-ஆம் தேதியும், மீதமுள்ள 72 இடங்களுக்கு நவம்பர் 20-ஆம் தேதியும் தேர்தல் நடத்தப்படும்; வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு, நவம்பர் 20ம் தேதி இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.அங்குள்ள பிலாஸ்பூர் மற்றும் பஸ்டர் பகுதிகளில், நடைபெற்ற பாஜக பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
பாஜக தொண்டர்களின் ஓயாத உழைப்பு தொடரும் வரை, பாஜகவின் ஆட்சி தொடரும். பா.ஜ.க.வை எப்படி எதிர்ப்பது என எதிர்க்கட்சிகளுக்கு தெரியவில்லை. சமீப காலமாக சிலர் என் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். அதுவும் பண மதிப்பிழப்பால் நான் பயன் பெற்றதாகவும் கூறுகின்றனர்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்புப் பணம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதால் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த முடிந்தது.காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒரு ரூபாயை அரசு செலவிட்டால் அதில் 15 காசு தான் மக்களுக்கு சென்றடைந்தது. 85 காசு எங்குச் சென்றதென்றே தெரியவில்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான போலி நிறுவனங்கள் ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது.நேஷனல் ஹெரால்டு மோசடி வழக்கில் ஜாமினில் இருக்கும் தாய் – மகன் உள்ளிட்ட சிலர் பாஜகவை கேள்வி கேட்கின்றனர். இவர்களுக்கு அடுத்தவர் நேர்மையை பற்றி கேள்வி எழுப்ப அருகதை கிடையாது. ஜாமினில் வந்தவர்கள் எனக்கு சான்று அளிக்க வேண்டாம்.இவ்வாறு அவர் பேசினர்.
dinasuvadu.com