உ.பியில் 5 மாத கர்ப்பிணி மனைவியை வரதட்சணைக் கொடுமையால்,கணவரே கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசிய கொடூரம் …!
5 மாத கர்ப்பிணி மனைவியை வரதட்சணைக் கொடுமையால், கணவரே கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசிய கொடுமை நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் சிவம், இவரின் மனைவி மாலா(வயது 23). நொய்டாவில் உள்ள டிஎல்எப் மாலில் உள்ள ஒருதுணிக்கடையில் சிவம், விற்பனைப் பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். மாலா காஜியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகவும், மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு வீட்டில் டியூஷனும் எடுத்து வந்தார்.
இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு சிவம் குடும்பத்தார் சம்மதிக்கவில்லை, எதிர்ப்புக்கு மத்தியில் இவர்கள் திருமணம் நடந்தது.
இந்நிலையில், திருமணத்தின் போது மாலாவின் தந்தை ரூ.5 லட்சம் வரதட்சணை தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால், தரவில்லை என்ற காரணத்தினால், மாலாவுடன் சிவம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 7-ம் தேதி நொய்டாவில் உள்ள பிஸ்ரக் போலீஸ் நிலையத்தில் தனது மனைவி மாலா காணாமல் போய்விட்டதாக சிவம் புகார் அளித்தார். போலீஸாராரும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நொய்டா அருகே இந்திராபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 24 பகுதியில் ஒரு பெரிய டிராவல் பேக்கில் இருந்து துர்நாற்றம் வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலையடுத்து,நேற்று இரவு அங்கு சென்ற போலீஸார் அந்த பேக்கை திறந்து பார்த்தபோது, அதில் பெண் சடலம் இருப்பது கண்டு அதிர்ந்தனர். எப்படியும் இந்தப் பெண் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்பதால், கடந்த 3 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட புகார்களை எல்லாம் போலீஸார் ஆய்வு செய்தனர்.
அதன்பின் சமீபத்தில் மனைவி காணாமல் போனதாகப் புகார் அளித்த சிவனை அழைத்த போலீஸார், அந்த சடலம், அவரின் மனைவி மாலாதான் என்பதை உறுதி செய்தனர்.
இதற்கிடையே மாலாவின் தந்தை ராம் அவதார் போலீஸில் தனது மருமகன் சிவம் குறித்து புகார் அளித்தார். அதில் ரூ.5 லட்சம் வரதட்சணை தராத காரணத்தால், 5 மாத கர்ப்பிணியாக இருந்த தனது மகளைக் கொலை செய்துவிட்டார் என்று தெரிவித்தனர். இதையடுத்து வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.
மாலாவின் கணவர் சிவத்தை போலீஸார் முறைப்படி விசாரணை நடத்தியதில் மாலாவை தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
இது குறித்து இந்திராபுரம் போலீஸ் நிலைய அதிகாரி தர்மேந்திரா சவுகான் கூறியதாவது:
”சிவமும், அவரின் மனைவி மாலாவும் தனியாக நொய்டாவில் உள்ள ஹைபாத்பூரில் வசித்து வந்துள்ளனர். கடந்த 7-ம் தேதி பிஸ்ரக் போலீஸ் நிலையத்தில் சிவம் தனது மனைவியைக் காணவில்லை என சிவன் புகார் அளித்தார்.
ஆனால் விசாரணையில், வீட்டில் சிவம் வரதட்சணை கேட்டு மனைவி மாலாவுடன் சண்டையிட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, துண்டுமூலம் மாலாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார்.
இந்தக் கொலையை மறைக்க, ஒரு டிராவல் பேக்கிற்குள் மாலாவின் உடலை வைத்து, அவர் மீது 20-க்கும்மேற்பட்ட ஜீன்ஸ் பேன்ட்களை வைத்து அடுக்கி சாலை ஓரத்தில் வீசிவிட்டார். அதன்பின் வீட்டுக்கு வந்து தானாகவே வீட்டின் பூட்டு, பீரோ, அலமாரி உள்ளிட்ட பொருட்களைக் கீழே இழுத்துப் போட்டுவிட்டு போலீஸிடம் மனைவி காணாமல் போனாதாக புகார் அளித்தார். இதை விசாரணையில் முழுமையாகத் தெரிவித்துவிட்டார்.
மாலாவின் உடற்கூறு ஆய்வின் அறிக்கை கிடைத்தபின் அவர் கர்ப்பிணியாக இருந்தாரா என்பது குறித்த விவரம் தெரியவரும்.”இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, சிவன் மீது ஐபிசி 498ஏ, 304பி, 201, 316 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சிவனின் பெற்றோர், சகோதரர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.