உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் அறிவிப்பு.!
உயிரிழந்த 21 புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலங்களில் தங்கி வேலைபார்க்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நடைபயணமாகவோ அல்லது லாரிகளிலோ தங்களது சொந்த ஊருக்கு செல்கின்றனர். இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் லாரி மூலம் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் உத்தரபிரதேச மாநிலம் அவ்ரயாவில் சென்றபோது இவர்கள் சென்ற லாரி மற்றொரு லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், 21 பேர் உயிரிழந்தனர். 22 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டனர். அவர்களில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், உயிரிழந்த 24 புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், விபத்தில் காயமடைந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, உத்தரப்பிரதேசம் அவ்ரயாவில் நடைபெற்ற சாலை விபத்து மிகவும் துயரமானது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மஹாராஷ்டிராவில் 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில் விபத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.