உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட உக்ரைன் மாடல் அழகி இன்று விடுதலை..!
உக்ரைனைச் சேர்ந்த மாடல் அழகி தாரியா மோல்சா (வயது 20). இவர் முறையான விசா எதுவும் இன்றி நேபாளம் வழியாக எல்லையை கடந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். பின்னர், உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சிறப்பு அதிரடிப்படை போலீசார் கடந்த ஏப்ரல் 3-ம்தேதி கைது செய்தனர். அவரிடம் போலியான டிரைவிங் லைசென்ஸ் மட்டும் இருந்தது.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் கோரக்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் உளவு வேலை பார்ப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்ட நபராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள அவரது நண்பர்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.
இதுபோன்ற காரணங்களால் அவரது ஜாமீன் மனுவை கோரக்பூர் நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து கடந்த வாரம் ஜாமீன் பெற்றார். இதையடுத்து அவரை விடுதலை செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின.
இந்நிலையில், தாரியாவை விடுதலை செய்வதற்கான உத்தரவை கோரக்பூர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்தது. கோர்ட் உத்தரவு கோரக்பூர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி இன்று அவர் விடுதலை செய்யப்படுவதாக சிறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.