உச்ச நீதிமன்றத்தில் விஜய் மல்லையாவின் கோரிக்கை நிராகரிப்பு
கடன் தொகையை முழுமையாக கட்டி விடுவதாக விஜய் மல்லையா கூறியிருந்த நிலையில் அவருக்கு எதிரான நடவடிக்கைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுள்ள தொழில் அதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் வரும் 10 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்தநிலையில், அனைத்து கடன்களையும் கட்டிவிட தான் தயாராக இருப்பதாகவும், வங்கிகள் ஏற்க மறுப்பதாகவும் விஜய் மல்லையா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மல்லையா தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு அவர் தடை கோரியிருந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. மேலும் இந்த வழக்கில் பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.