இளம் பெண் பலாத்கார வழக்கில் உ.பி. பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் கைது …!
சிபிஐ அதிகாரிகள் உத்தர பிரதேசத்தில் இளம் பெண் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கரை நேற்று கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் உன் னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர். இவரும் அவரது சகோதரர் அனில் சிங்கும் தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது இளம் பெண் ஒருவர் காவல் நிலையத் தில் புகார் அளித்தார். அதனால், அந்தப் பெண்ணின் தந்தை பப்புவை குல்தீப் சிங்கும் அனில் சிங்கும் தாக்கியதாகத் தெரிகிறது. ஆனால் போலீஸார், தாக்குதலுக்கு ஆளான பப்புவை கைது செய்தனர்.
இந்நிலையில், சிறையில் பப்பு மர்மமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் பின்னணியில், பலாத்கார வழக்கு தொடர்பாக, எம்எல்ஏ குல்தீப்பின் சகோதரர் அனில் சிங்கை போலீஸார் அண்மை யில் கைது செய்தனர். எம்எல்ஏ குல்தீப் சிங் மீதும் போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். எனினும், இந்த வழக்கை உத்தர பிரதேச அரசு சிபிஐ வசம் ஒப்படைத்தது.
இதையடுத்து, வழக்கு தொடர் பாக நேற்று முன்தினம் மாலை சிபிஐ தனது விசாரணையைத் தொடங்கியது. பின்னர் நேற்று அதிகாலை குல்தீப் சிங் வீட்டுக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள், அவரை லக்னோவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அறிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று கருத்து தெரிவித்தார். டெல்லியில் அம்பேத்கர் நினைவு இல்லம் திறப்பு நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது:
நாகரீகமிக்க ஒரு சமூகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. இந்த சம்பவங்கள் நம்மை வெட்கி தலைகுனிய வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியாகக் கூறிக் கொள்கிறேன். நமது பெண்களுக்கு நியாயமான நீதி கிடைக்கப்பெறும். இவ்வாறு மோடி உறுதியளித் தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.