இறால் பிடிக்கப் போனவரை இழுத்துச் சென்றத முதலை ! மேற்கு வங்கத்தில் பரபரப்பு..!
உலகின் மிகப் பெரிய சதுப்புநில சுந்தரவனக் காடுகள் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான மேற்கு வங்காளம் மாநிலம் வரை நீண்டு காணப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்காளம் மாநிலத்தின் 24-வது தெற்கு பர்கானா மாவட்டத்தின் பல பகுதிகள் இந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது.
இந்நிலையில், இங்குள்ள போனோஷம்நாலர் கிராமத்தை சேர்ந்த சிலர் கும்பலாக சென்று இந்த காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள ஜகடல் ஆற்றில் இன்று இறால் மீன்களை பிடித்து கொண்டிருந்தனர்.
காலை சுமார் 11 மணியளவில் தண்ணீருக்குள் உடலை மறைத்தபடி வந்த ஒரு முதலை இறாலுக்காக வலைவீசி விட்டு காத்திருந்த ஜரேஸ்வர் மொன்டல் என்பவரை திடீரென்று கவ்வி இழுத்துச் சென்றது.
அருகில் இருந்தவர்கள் அலறியடித்து சில மீனவர்களின் துணையுடன் ஆற்றுநீரில் நடத்திய தேடுதல் வேட்டை தோல்வியில் முடிந்தது. முதலை வாயில் சிக்கிய அந்நபர் இனி உயிருடன் திரும்பும் வாய்ப்புகள் மிகக்குறைவாக உள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.