இருவேறு இடங்களில் ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!
2 தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீரின் இருவேறு இடங்களில் சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர், ஒரு தீவிரவாதியை உயிருடன் பிடித்துள்ளனர்.
அனந்த்நாக் மாவட்டம் டயல்காம் ((Dialgam)), சோபியான் மாவட்டம் கச்தூரா ((kachdoora)), டிராகத் ((dragad)) ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்தப் பகுதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இந்த மூன்று இடங்களிலும் தீவிரவாதிகள் – பாதுகாப்புப் படையினர் இடையே விடிய விடிய சண்டை நடைபெற்றது.
டயல்காமில் நடைபெற்ற சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், புதிதாக அமைப்பில் சேர்ந்த ஒரு தீவிரவாதியை உயிருடன் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அங்கு துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு வந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதேபோல் சோபியான் மாவட்டம் டிராகத்திலும் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். கச்தூரா, டிராகத் பகுதிகளில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு 7 முதல் 8 தீவிரவாதிகள் வரை பதுங்கி இருக்கக் கூடும் என்று கருதப்படுவதால் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு காஷ்மீரில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.