இருவேறு இடங்களில் ஜம்மு-காஷ்மீரில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!
8 தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீரில் மூன்று இடங்களில் நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை சுட்டுக் கொன்றது. இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவரும், பொதுமக்களில் இருவரும் உயிரிழந்தனர்.
அனந்த்நாக் மாவட்டம் டயல்காம் ((Dialgam)), சோபியான் மாவட்டம் கச்தூரா ((kachdoora)), டிராகத் ((dragad)) ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்தப் பகுதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.
இந்த மூன்று இடங்களிலும் தீவிரவாதிகள் – பாதுகாப்புப் படையினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. டயல்காமில் நடைபெற்ற சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், புதிதாக அமைப்பில் சேர்ந்த ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிபட்டான். தொடர்ந்து சோபியான் மாவட்டம் டிராகத்தில் நடந்த சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளில் இருவர், ராணுவ அதிகாரி லெட்டினண்ட் உம்மர் ஃபயாஸ் கொலையில் தொடர்புடையவர்கள் என்று காஷ்மீர் மாநில காவல்துறை டிஜிபி எஸ்.பி. வைத் கூறினார்.
இந்த இடங்களில் நடைபெற்ற சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் உயிர் தியாகம் செய்துள்ளதாக எஸ்.பி. வைத் தெரிவித்துள்ளார். உள்ளூர் மக்களில் இருவர் குண்டடி பட்டு உயிரிழந்ததாகவும், 25 பேர் பெல்லட்டாலும், 6 பேர் துப்பாக்கி குண்டுகளாலும் சுடப்பட்டு காயம் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். காவல்துறையினர், ராணுவ வீரர்கள், மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் சிலர் காயமுற்றுள்ளதாகவும் வைத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.