இன்று மாலை கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு..!!
கர்நாடக சட்டப்பேரவையில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசு இன்று மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது. ஆயினும் 5 ஆண்டுகளுக்கு குமாரசாமியை ஆதரிப்பதாக காங்கிரஸ் கட்சி எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை என்று துணை முதலமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசியலில் நேரிட்ட பரபரப்பான திருப்பங்களுக்கிடையே குமாரசாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. அரசைக் கவிழ்க்க பாஜகவினர் ஆபரேசன் கமலம் என்ற பெயரில் சதித்திட்டம் தீட்டி வருவதாக குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் நடைபெறக் கூடும் என்ற அச்சத்தால், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூரின் ஹில்டன் போன்ற நட்சத்திர விடுதிகளில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாலையில் நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக பகல் 12 மணிக்கு சபாநாயகரைத் தேர்வு செய்ய உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். சபாநாயகர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் ரமேஷ்குமாரும் பாஜக சார்பில் சுரேஷ்குமாரும் மனுதாக்கல் செய்துள்ளனர்.
மதசார்பற்ற ஜனதா தள அரசு இன்று காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை ஸ்திரப்படுத்திக் கொண்ட பிறகே முழு அளவில் அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர். அமைச்சரவை இலாகாக்களில் பெரும் பகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்ற கடும் இழுபறி நீடிக்கிறது. அமைச்சர் பதவி கோரி சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் கர்நாடக காங்கிரசில் உட்கட்சிப் பூசலும் வலுத்துள்ளது. குமாரசாமி அரசுக்கு 5 ஆண்டு ஆதரவு என்பது உறுதி செய்யப்படவில்லை என்று துணை முதலமைச்சர் பரமேஸ்வரா கூறியுள்ளார். பெரும்பான்மையை நிரூபித்த பிறகே இதர பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்