இன்று மாநிலங்களவையில் தாக்கலாகிறது முத்தலாக் தடை சட்ட மசோதா!
முத்தலாக் வழக்கத்துக்கு தடை விதிக்க வகை செய்யும் ‘முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோ தா’ மக்களவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி முத்தலாக் நடைமுறையைப் பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப் பட்டுள்ளது.
மேலும், மசோதா தாக்கல் செய்யப்படும்போது, அதனை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுக்க திரினாமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது முடிவு குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
குலாம் நபி ஆசாத் போன்ற சில தலைவர்கள், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டுள்ள மசோதா என்பதால், எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் தலைமை தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த மசோதாவில் திருத்தம் கோர வேண்டாம் என காங்கிரஸ் கட்சியை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு இன்றே மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source: dinasuvadu.com