இன்று ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்பு!வீட்டிலேயே கிளம்பியது எதிர்ப்பு!மகள் கடும் எதிர்ப்பு
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்க மூத்த காங்கிரஸ் தலைவர்களை தொடர்ந்து அவரது மகள் சர்மிஸ்தா முகர்ஜியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சர்ச்சை, எதிர்ப்புக்கிடையே இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் உள்ளது. அங்கு இன்று ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் பயற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகிறார். ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அவர் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஜாபர் ஷெரீப், சிதம்பரம் உள்ளிட்டோரும் பிரணாப் ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால், அதை பிரணாப் முகர்ஜி ஏற்கவில்லை. ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என கடிதங்கள், கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன, நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதை அந்த கூட்டத்தில் பேசுவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார்.
பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு அவரது மகளும், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘பிரணாப் முகர்ஜி நாக்பூர் செல்வதால், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தவறான கதைகளை கட்டவிழ்த்து விடும். அந்த பிரிவினைவாத அமைப்பு தங்கள் கொள்கைகளை நீங்கள் (பிரணாப் முகர்ஜி) ஏற்றுக் கொண்டு விட்டதாக விஷம பிரச்சாரம் செய்யும்.
அதனால் தான் நீங்கள் அங்கு செல்வதை நாங்கள் எதிர்க்கிறோம். ஏற்கெனவே சில வதந்திகள் கிளம்பி விட்டன. அடுத்தடுத்த நாட்களில் வேறு சில வதந்திகளும் வரலாம். நான் பாஜகவில் சேரப்போவதாகவும் வதந்தி கிளப்புகின்றனர். காங்கிரஸ் கட்சியில் இருப்பதால் தான் நான் அரசியலிலேயே இருக்கிறேன். ஒருவேளை காங்கிரஸை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டால், நான் அரசியலை விட்டே வெளியேறி விடுவேன்’’ எனக் கூறியுள்ளார்.
இதனிடையே விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலையே நாக்பூர் வந்து சேர்ந்தார் பிரணாப் முகர்ஜி. அவருக்கு ஆர்.எஸ்.எஸ். சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இன்று மாலை 5:00 மணியளவில் நடைபெறும் விழாவில் அவரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வரவேற்று மேடைக்கு அழைத்துச் செல்கிறார். ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி உள்ளிட்ட தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
பிரணாப் முகர்ஜி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்காக நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.