இந்துக்கள் 5 குழந்தை பெற்று , ஆயுத பயிற்சி அளியுங்கள்…காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சர்சை பேச்சு…!!
இந்துக்கள் ஒவ்வொருவரும், தலா ஐந்து குழந்தைகளுக்குக் குறையாமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று காஷ்மீர் மாநில பாஜக தலைவர் மகந்த் தினேஷ் பாரதி, அதிமுக்கியமான ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.
ராமர் கோயிலை வைத்து, மதவெறியைக் கிளப்பி விடும் வேலையில், விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பு மீண்டும் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியில், பாஜக இழந்துவிட்ட செல்வாக்கை, மத வன்முறைகள் மூலம் ஈடுகட்டுவதற்காக விஎச்பி இதனைச் செய்து வருகிறது. அதிலொன்றுதான், அந்த அமைப்பு ஊர் ஊருக்கு நடத்தும் ‘தர்மசபை’ என்ற கூட்டமாகும்.
அந்த வகையில், காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரிலும், விஎச்பி-யின் ‘தர்மசபை’ நடைப்பெற்றது. ஆர்எஸ்எஸ் தலைவர்கள் உட்பட பலர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போதுதான், பாஜக தலைவர் மகந்த் தினேஷ் பாரதி, “இந்துக்கள் தலா ஐந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
அதுமட்டுமன்றி, “இந்துக் குழந்தைகள் அனைவருக்கும் ஆயுதங்களை வழங்கி, இந்து மதத்திற்கு எதிரானவர்களை அழித்தொழிக்க பயிற்சி அளிக்க வேண்டும்” என்றும் ஆபத்தான வகையில் பேசியுள்ளார். “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக, இந்து சமுதாயத்தினர் ஒற்றுமையுடன் போரிட வேண்டும்” என்றும் பகிரங்கமாகவே பயங்கரவாதச் செயலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தற்போது, காஷ்மீர் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக தலைவர் மகந்த் தினேஷ் பாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு கோரிக்கைகளும் விடப்பட்டுள்ளன.
இதையடுத்து, ‘மகந்த் பாரதியின் பேச்சு குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும், இவ்விவகாரத்தில் சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைக் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் ஆளுநரின் ஆலோசகர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.