இந்திய விமானப்படைக்கு 6 அப்பாச்சி ரக அதி நவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல்..!
இந்திய விமானப்படைக்கு 6 அப்பாச்சி ரக அதி நவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் இந்த பரிவர்த்தனை நடைபெறும் என கூறப்படுகிறது. 6 ஆயிரத்து 285 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஏஹெச் அபாச்சி (AH-64E Apache) ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
AH-64E அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் பாதுகாப்புத் துறையை நவீனப் படுத்துவதுடன், எதிரி நாட்டு ராணுவ தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் பயன்படும் என அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை தெரிவித்துள்ளது.
இரவிலும் இலக்குகளைத் துல்லியமாக கண்டறியும் திறன், தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஹெலிஃபையர் (Hellfire) கவசம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.