இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி அதிரடி..!
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தங்களுக்கு காங்கிரஸ் தலைமை தேவையில்லை என இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக்கூட்டம், கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, வரும் ஜூன் 20ம் தேதி விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டமிடப்படுவதாக வந்த கடிதத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறிய அவர், இருப்பினும் நாட்டின் பிரதமருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் விரும்பவில்லை என்று குறிப்பிட்ட சுதாகர் ரெட்டி, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள ராகுல் காந்தியின் தலைமை தங்களுக்கு தேவையில்லை என்றார்.
கூட்டணிக்காக காங்கிரசிடம் இந்திய கம்யூனிஸ்ட் சரணடையாது எனக் கூறிய சுதாகர் ரெட்டி, மதசார்பற்ற கட்சிகள் ஒன்றுமையாக இருந்து பா.ஜ.கவிற்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.