இந்தியா முழுவதும் முழுஅடைப்புக்கு அழைப்பு…!வட மாநிலங்களில் பதற்றமான பகுதிகளில் 144 தடை…!
மத்திய உள்துறை அமைச்சகம், இடஒதுக்கீட்டில் முன்னுரிமை கோரி முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை காக்க, பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தியுள்ளது.
தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தும் வகையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தின. அப்போது ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இந்நிலையில், கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரி, சில அமைப்புகள் இன்று நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்தப் போராட்டத்தின்போது, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வண்ணம் பாதுகாப்பை பலப்படுத்தவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பதற்றமான பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மூலம் தகவல்கள் பரவலைத் தடுக்க, நேற்று மாலை 6 மணி முதல் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கையாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.