இந்தியா நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வருகிறது!பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி , நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசியபோது தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள கின்டாவ் நகரில் 18வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன், ஈரான் அதிபர் ஹஸ்சன் ரவுகானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் முதன்முறையாக உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, குடிமக்களின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, தேசிய ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாகவும் கூறினார்.
தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உதாரணமாக ஆப்கானிஸ்தான் திகழ்வது துரதிருஷ்டவசமானது என்றும் மோடி கூறினார். அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஆப்கன் பிரதமர் கியானி துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். புவியியலின் வரையறையை மாற்றியமைக்கும் விதமாக டிஜிட்டல் இணைப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா, அண்டை நாடுகள் மற்றும் ஷாங்காய் அமைப்பு நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோடி கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.