இந்தியா கீழ் திசை நாடுகளுடன் இணைந்து முன்னேற்றத்திற்காக பாடுபடும்!பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி ,கீழ் திசை நாடுகளுடன் இணைந்து முன்னேற்றத்திற்காக இந்தியா பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா,மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த பயணத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற 28 நாடுகள் பங்கேற்ற சங்கரில்லா பேச்சுவார்த்தை மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அந்த மாநாட்டில் பேசிய அவர், கிழக்கு திசை நோக்கி இந்தியர்கள் சூரியனை வணங்க மட்டுமல்ல, இங்குள்ள நாடுகளில் தொழில் புரியவும் திரும்புகிறார்கள் என்றார். இந்தியாவின் கீழ் திசை நுழைவாயிலாக உள்ள சிங்கப்பூருடனான இந்தியாவின் உறவு நூற்றாண்டுகளை கடந்தது என்ற அவர், இருநாடுகளும் தொடர்ந்து நல்லுறவை காத்து வருவதாக குறிப்பிட்டார்.
ஆசிய,பசுபிக் நாடுகளில் கூட்டு வளர்ச்சிக்கு இந்தியா என்றும் துணை நிற்கும் என்ற மோடி, சீனாவுடனும், இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது என்றார். எல்லை பிரச்சனை உள்ளிட்டவற்றில் சீனாவும், இந்தியாவும் முதிர்ந்த அறிவுத்திறனுடன் செயலாற்றி வருவதாக கூறிய அவர், இரு நாடுகள் இணைந்து நம்பிக்கையுடன் செயல்படுவதால் ஆசிய, பசுபிக் பிராந்தியமே வளர்ச்சி காணும் என்றார்.
சர்வதேச நாடுகளுடன் இணைந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோட இந்திய இப்போது புதிய முனைப்பு காட்டி வருவதாகவும் மோடி தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.