ஆஷிஃபா சிறுமி வழக்கு: வரும் 28ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
கத்துவா நீதிமன்றம் , ஜம்மு காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஜம்மு பகுதியைச் சேர்ந்த முகமது யூசப் புஜ்வாலா என்பவரின் 8 வயது மகள், கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி காணாமல் போனார். ஜனவரி மாதம் 16ம் தேதி அவரது உடல் காட்டுப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டது. பின்னர் அது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணையில் காவல்துறை அதிகாரி உதவியுடன் போதை மருந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. குற்றம்சாட்டப்பட்ட 8 பேரில் ஒருவர் சிறுவன் என்பதால் அவர்மீது தனியாகவும், மற்ற 7 பேர் மீது தனியாகவும்
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 8 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவிடாமல் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிறுமி ஆஷிஃபா வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 8 பேரும் கத்துவா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் குற்றப்பத்திக்கை நகல்களை வழங்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.