இதற்காக கடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்றும் அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சட்டசபையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவையின் முடிவை ஏற்று, சட்டசபை கலைப்புக்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார். மேலும் புதிய அரசு அமைவது வரை தற்காலிக முதல்-மந்திரியாக தொடருமாறு சந்திரசேகர் ராவை அவர் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து மாநில சட்டசபை கலைப்பு குறித்த அறிவிப்பை கவர்னர் அலுவலகம் முறைப்படி வெளியிடும் என தெரிகிறது. இந்த கலைப்பு நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதற்கிடையே தெலுங்கானா சட்டசபை கலைப்பு நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக தலைமை செயலாளர் சைலேந்திர குமார் ஜோஷி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. இது தொடர்பாக இன்று மதியம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு டிசம்பரில் மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு நடக்க உள்ள சட்டசபை தேர்தலுடன் தெலுங்கானா சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடத்துவதற்கான சாத்திய கூறுகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து இன்று அறிவிப்பு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.