ஆபரேஷன் கமலா அச்சம் காங்-ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் மீண்டும் ஹோட்டலில் தங்க வைப்பு..!!

Default Image

கர்நாடகச் சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கும் நிலையில், ‘ஆபரேஷன் கமலா’வை பாஜக செயல்படுத்திவிடக்கூடாது என்பதற்காக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம்(ஜேடிஎஸ்) எம்எல்ஏக்கள் அனைவரும் சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் நடந்த தேர்தலுக்கு பின் தனிப்பெரும் கட்சியாக உருவான பாஜக ஆட்சியைக் கைப்பற்றி, எடியூரப்பா முதல்வரானார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதளம் கூட்டணியை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜுபாய் வாலா அழைத்தார்.

இதையடுத்து கர்நாடகத்தில் 24-வது முதல்வராக ஜேடிஎஸ் கட்சித் தலைவர் குமாரசாமி நேற்று பதவி ஏற்றார். சட்டப்பேரவையில் நாளை தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன், காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை பாஜக ‘ஆபரேஷன் கமலா’ மூலம் எம்எல்ஏக்களை இழுத்துவிடலாம் என காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் அச்சப்படுகின்றன

இதற்காக இரு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 9 நாட்களாக தங்கள் குடும்பத்தினரைக் காண முடியாமல் எம்எல்ஏக்கள் ஹோட்டலில்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதால், மனவேதனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரு புறநகரில் உள்ள கோல்ஃப்ஷையர் ரிசார்ட்டிலும், ஜேடிஎஸ் எம்எல்ஏக்கள் ஹில்டன் எம்பஸி கோல்ஃப்லிங்கிலும் தங்கியுள்ளனர்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில்தான் தங்கி இருப்பார்கள். அதன்பின் அவர்கள் வீட்டுக்கும், தொகுதிக்கும் அனுப்பப்படுவார்கள். எம்எல்ஏக்கள் யாரும் சிறை வைக்கப்படவில்லை. சட்டவிரோதமாக அடைத்து வைக்கவும் இல்லை.

அவ்வாறு வரும் செய்திகள் தவறானவை. விருப்பத்தின் அடிப்படையில்தான் எம்எல்ஏக்கள் தங்கி இருக்கிறார்கள். எம்எல்ஏக்களிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்டதாக சிலர் வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படவில்லை, அவர்கள் குடும்பத்தாருடன் செல்போனில் பேசி வருகிறார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்தபின், எம்எல்ஏக்கள் அனைவரும் அவர்களின் தொகுதிகளுக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்