ஆண்டவா இனி அத்தன ஜென்மத்துக்கும் ஜென்மத்திற்கும் மனைவியிடம் இருந்து விடுதைலை வேண்டும்!வினோதமாக ஆண்கள் வழிபாடு
சத் பூர்ணிமா பண்டிகையன்று , ஏழேழு பிறவிகளிலும் இந்த மனைவிகளிடம் இருந்து விடுதலை கேட்டு, அரச மரத்தை வலமிருந்து இடமாகச் சுற்றி ஆண்கள் வினோத வழிபாடு நடத்தினார்கள்.
நேற்று அனைத்துப் பிறவிகளிலும் இப்போது இருக்கும் கணவனே தனது கணவராக வர வேண்டும், உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என வேண்டி வத் பூர்ணிமா நாளில் பெண்கள் வடமாநிலங்களில் கோயில்களில் வழிபட்டனர். ஆனால், மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் அதே தினத்தன்று தங்களுக்காக வேண்டிக்கொண்டனர்.
நேற்று வடமாநிலங்களில் வது பூர்ணிமா என்று வத் சாவித்ரி என்ற பண்டிகை கொண்டாடப்பட்டது. சத்யவான் சாவித்ரி எமனிடம் இருந்து தனது கணவரைப் போராடி மீட்டுவந்ததாகப் புராணங்களில் கூறப்படுவதை நினைவூட்டி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் அரசமரத்தில் கயிறுகட்டி தனது கணவரின் நலத்துக்காக வேண்டிக்கொள்வார்கள். அடுத்த ஏழேழு பிறவிக்கும் இப்போது இருக்கும் கணவர்களே கணவராக வர வேண்டும் என்று நினைத்து வழிபடுவார்கள். அவ்வாறு வடமாநிலங்களில் நேற்றும், இன்றும் பெண்கள் கோயில்களில் வழிபாடு நடத்துவார்கள்.
இந்நிலையில், பத்னி பதித் புருஷ் சங்கத்தினர் அதாவது மனைவியால் பாதிக்கப்பட்டோருக்கான ஆண்கள் அமைப்பு இந்தப் பண்டிகையை நூதனமான முறையில் கொண்டாடினார்கள். அதாவது, அடுத்த ஏழேழு ஜென்மத்துக்கும் இந்த மனைவியிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்று கோரி வழிபட்டனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள வாலூஜ் நகரில் உள்ள இந்த சங்கத்தினர் அரச மரத்தில் மஞ்சல்நூல் கட்டி, மரத்தை இடமிருந்து வலமாக வருவதற்கு பதிலாக வலமிருந்து இடமாக ரிசர்ஸில் வந்து வழிபாடு நடத்தினார்கள்.
இது குறித்து மனைவியால் பாதிக்கப்பட்டோர் சங்கத்தின் உறுப்பினர் துஷார் வஹாரே கூறுகையில், அடுத்த ஏழேழு பிறவிக்கும் இந்த மனைவி எனக்கு வந்துவிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டேன். சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி என்னை பல்வேறு வழக்குகளில் சிக்கவைத்து, என்னை பெரும் வேதனைக்கு உள்ளாக்கிவிட்டார். நான் 7 வினாடிகள் கூட வாழத் தயாராக இல்லாத மனைவியுடன் 7 பிறவிகள் எப்படி வாழ முடியும் எனக்கு மனைவியாக வரக்கூடாது எனத் தெரிவித்தார்.
மற்றொரு உறுப்பினர் கூறுகையில், என் மனைவி என் மீது பொய்யான வழக்கு தொடர்ந்ததால், எனக்கு ரூ.4 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் கூறுகையில், எனக்குத் தேவையான உணவை நானே தயாரிக்கிறேன், துணிகளைத் துவைத்தல் உள்ளிட்ட அனைத்துப்பணிகளையும் நானே செய்கிறேன் ஆதலால், எனக்கு மனைவி தேவையில்லை. மனைவியின் முகத்தைப் பார்ப்பதற்கு பதிலாகத் தற்கொலை செய்வதே சிறந்தது என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இந்தச் சங்கத்தின் தலைவர் பாரத் புலாரே உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் ஐபிசி பிரிவு 498-ஏ, 354, உள்ளிட்ட பிரிவுகளை பெண்கள் கணவருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் எதிராகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை விளக்கும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி மரத்தைச் சுற்றி வந்தனர்.