ஆட்சி கலைப்பு முதல்வர் பரபரப்பு பேட்டி..!!
கர்நாடகம் ,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. கூட்டணி ஆட்சியின் முதல்-மந்திரியாக ஜனதாதளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனுமான குமாரசாமி இருந்து வருகிறார். துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார்.இந்த நிலையில் மந்திரி பதவி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி இருப்பதால், இதனை சாதகமாக பயன்படுத்தி கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா முயற்சி செய்வதாக காங்கிரஸ்- ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தென்இந்திய முதல்-மந்திரிகள் மாநாடு வருகிற 18-ந் தேதி பெங்களூருவில் நடக்கிறது.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தென்இந்திய மாநிலங்களின் முதல்-மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள். எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சியின் பின்னணியில் யார்-யார் இருக்கிறார்கள் என்பது பற்றி அனைத்து விஷயங்களும் எனக்கு தெரியும்.
லாட்டரியில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பவர்கள், 2010-ம் ஆண்டு பெங்களூரு மாநகராட்சி அலுவலகத்தில் ஆவணங்களுக்கு தீவைத்தவர்கள் உள்பட யார்-யார் மூலமாக பேரம் பேசுகிறார்கள் என்ற விஷயமும் எனக்கு தெரியும். அனைத்து தகவல்களையும் நான் சேகரித்து உள்ளேன்.அத்தகையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை பாயும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் நான் தயாராகி வருகிறேன். ஆட்சியை கவிழ்க்க முடியாது. எனது கூட்டணி ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் செய்கிறேன். நான் ஒன்றும் அமைதியாக உட்கார்ந்து இருக்கமாட்டேன்.
ஆட்சியின் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தாமல், வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்துவேன். எனக்கு மாநிலத்தின் வளர்ச்சி தான் முக்கியம். நான் சுதந்திரமாக உள்ளேன். எதை பற்றியும் கவலைப்படமாட்டேன்.என்று முதல்வர் குமாரசாமி கூறினார்.
DINASUVADU