”ஆட்சியை கலைக்க பிஜேபி தந்திரம் செய்கிறது” முதல்வர் பரபரப்பு பேட்டி..!!
எனது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பாஜக சதி செய்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல்வராகவும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஷ்வரா துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில், ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு பாஜக சதி செய்வதாக குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, அவர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என பாஜக சதி செய்கிறது. இதற்காக சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகளை மத்திய பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது.
இதன்படி, கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட சில தலைவர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதன்மூலம், கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டு ஆட்சி கலைந்துவிடும் என பாஜக நினைக்கிறது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தனது செல்வாக்கைப் பலப்படுத்துவதற்காக பாஜக பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதிதான் சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை மூலம் பதிவு செய்யப்படும் வழக்குகள் என்று முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
DINASUVADU