இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளது : அருண் ஜேட்லி..!
இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுள்ளதாகவும், இந்த வளர்ச்சிப் போக்கு இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடரும் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது பேஸ்புக் பதிவில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.7 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டுவருவதையே இது காட்டுவதாகவும், இந்த வளர்ச்சிப் போக்கு இன்னும் சில ஆண்டுகளுக்குத் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பண மதிப்பிழப்பு, சரக்கு சேவை வரி ஆகியவற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2 விழுக்காடு வீழ்ச்சியடையும் என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார்.
மோடி அரசின் கொள்கைகள் மக்களை ஏழைகளாக்கும் என பாஜகவைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்த் சின்கா தெரிவித்திருந்தார். அவர்கள் இருவருக்கும் பதிலளிக்கும் வகையில் அருண் ஜேட்லி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.