அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா ஆச்சர்யம் அளிக்கவில்லை..!
கடந்த சில நாட்களாகவே டெல்லி வட்டாரங்களில் தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பிலிருந்து அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியது. இப்போது தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக பொறுப்பிலிருந்து விலகுவதாக அரவிந்த் சுப்ரமணியன் குறிப்பிட்டார்.
ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றதும், காலியாக இருந்த தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பில், அரவிந்த் சுப்ரமணியன் கடந்த 2014 அக்டோபர் மாதம் நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் அரவிந்த் சுப்ரமணியத்தின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், இன்னும் ஓராண்டு அப்பதவியில் இருப்பார் என்று மத்திய அரசு தெரிவித்தது. இப்போது பொறுப்பை ராஜினாமா செய்து உள்ளார். இதனை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லியும் உறுதிசெய்துள்ளார்.
இந்த நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கூறியிருப்பதாவது:- “ அரவிந்த் சுப்ரமணியனின் ராஜினாமா ஆச்சர்யம் தரவில்லை.
மோடி அரசின் மிகப்பெரும் மோசமான பொருளாதார நிர்வாகத்தின் காரணமாக நிதி ஆலோசகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். நிதி ஆயோக் தலைவர் அரவிந்த் பனக்ரியா, ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, அரவிந்த் சுப்ரமணியனின் ராஜினாமா செய்தி வந்துள்ளதால், இது எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.