அரசு அலுவலகங்கள், பூங்காக்களை தொடர்ந்து சுங்கச்சாவடியிலும் காவி நிறம்..!
உத்தரப்பிரதேச மாநில முதல்வராக பாஜக கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யனாத் பதவி ஏற்றதிலிருந்து அம்மாநிலத்தில் எங்கும் காவி நிறமே மேலோங்கி காணப்படுகிறது.
அரசு அலுவலங்கள், புதிய கட்டிடங்கள், பூங்காக்கள், முதல்வர் அலுவலகம் என அனைத்திற்கும் காவி நிறம் பூசப்படுவது மாநிலத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட அம்சமாகவே மாறி விட்டது. இந்நிலையில் முஷாபர்நகர்- சஹரான்பூர் நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிக்கும் காவி நிறம் பூசப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலம் முழுவதும் காவிமயமாக மாறி வருவது ஆளுங்கட்சியின் சூழ்ச்சியே என பிற அரசியல் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர், முதல்வர் யோகி ஆதித்யனாத் தலைமையில் ஹர்டோய் மாவட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் அனைத்து பகுதிகளிலும் காவி நிறமாக காட்சியளிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள கழிவறை சுவர்களிலும் காவி நிற டைல்ஸ் ஓடுகள் பதிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.