காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியைக் கோமாளி இளவரசர் என்று மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி விமர்சித்தமைக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் கட்சி, அருண் ஜேட்லியை அரசவைக் கோமாளி என்று கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறிய பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு நிதி அமைச்சர் ஜேட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் இன்று பதில் அளித்திருந்தார். அதில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த ஜேட்லி, கோமாளி இளவரசர் என்றும், ஆளுமை தொடர்பான சிக்கல் இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலடி தரும்விதமாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் ஜேட்லியை விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:பொருளாதாரத்தைப் பற்றிய புரிதல் அருண் ஜேட்லிக்கு இல்லாததால், நாட்டின் பொருளாதார நிலை மிகுந்த பாதிப்புள்ளாகிவிட்டது. நம்முடைய நாட்டுக்குத் தேவை நிதி அமைச்சர், பிளாக்குகளில் பிதற்றுபவர் அல்ல. அரசவைக் கோமாளியாக இருக்கிறார் ஜேட்லி.
மிஸ்டர் ஜேட் லை(jait lie) ஆல் உண்மையை மாற்ற முடியாது. நீங்கள் பொருத்தமற்ற வகையில் உண்மையை மறைக்கிறீர்கள். உங்களின் தவறான நிர்வாகத்தால் ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது, உங்களின் திறமையின்மையால் ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்தது. உங்களின் சரியான புரிதல் இல்லாததால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது . இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி கூறுகையில், , நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கும் போது, நிதிஅமைச்சர் அருண்ஜேட்லி பிளாக்குகளில் மட்டும் தொடர்ந்து எழுதிவருவது வேதனை அளிக்கிறது.
நாட்டின் நிர்வாகம் மிகவும் கேலிக்கூத்தாக, சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. நிதிஅமைச்சர் பாதுகாப்பு விவகாரங்களைப் பேசுகிறார், ரயில்வே அமைச்சர் நிதித்துறையைப் பேசுகிறார், சட்டத்துறை அமைச்சர் பல்வேறு விஷயங்களைப் பேசுகிறார். அரசின் நிர்வாகம் மிகவும் குழப்பமாகவும், அபத்தமாகவும் இருக்கிறது. இவர்களுக்கு நாட்டின் நிர்வாகத்தை எவ்வாறு நடத்துவது என்பது தெரியாது.இவர்கள் பிளாக்குகளில் எழுதமட்டும்தான் தகுதியானவர்கள் என்பதை மக்கள் சுட்டிக்காட்டும் நேரம் வந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.
DINASUVADU