அயோத்தியில் ராமர் கோவில் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை – உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ..!
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற விவகாரத்தில் இன்னும் இறுதி தீர்வு ஏற்படவில்லை. இந்த வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்தி சென்று ராமர் ஜென்ம பூமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் முதல்வர் பேசுகையில், “நாம் இந்த உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயகத்தில் வாழ்கிறோம். இதில் நீதித்துறை, நிர்வாகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சொந்த விதிகளுக்கு உட்பட்டுள்ளனர். நாம் அந்த விதிகளை மனதில் கொள்ள வேண்டும்.
ராமர் இந்த உலகத்திற்கே கடவுள் போன்றவர். அயோத்தி ராமரது ஆசீர்வாதத்தை பெற்றுள்ளதால் இங்கு தான் ராமர் கோவில் அமையும். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. மடாதிபதிகள் இவ்வளவு நாள் பொறுமையாக இருந்து விட்டீர்கள். இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருங்கள். இறைவன் ராமனின் அடையாளமே கண்ணியம் தான். சமுதாயத்தில் கண்ணியத்தின் வெளிபாடாக மடாதிபதிகள் திகழ்கின்றனர். நாம் கண்ணியத்தின் வரம்பு எல்லைக்குள் இருக்கும் போது அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும்”என்று கூறினார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியினரை மறைமுகமாக தாக்கிய யோகி ஆதித்யநாத் கூறுகையில், “ஒரு புறம் சில மூத்த தலைவர்கள் உச்சநீதிமன்றம் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராமர் கோவில் பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். சில காங்கிரஸ் தலைவர்கள் பாஜக அரசு அயோத்தி பிரச்சினையில் எதுவும் செய்யவில்லை எனக் கூறுகின்றனர். பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி செல்லும் போது இவர்கள் சதி செய்ய நினைக்கிறார்கள். கும்ப மேளா நிகழ்ச்சிக்கு உலக அங்கீகாரத்தை பெற்று கொடுக்க கடந்த அரசு தவறி விட்டது. ஆனால் தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான அரசு கும்ப மேளா நிகழ்ச்சிக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அனைத்து மடாதிபதிகளின் ஆசீர்வாதங்களும் பிரதமர் மோடிக்கு கிடைக்கும்” எனக் கூறியுள்ளார்.
இதனிடையே சமீப காலங்களில் ராமர் கோவில் கட்டுமானம் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் முறையாக இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.