அயோத்தியில் ராமர் கோவில் கட்ட விருப்பம் என ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிரடி முடிவு ..!
வருகின்ற 2019ம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டீரிய ஷியா சமாஜ்) என்ற பெயரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் ஆதரவு வழங்குவார்கள். அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கும் நாங்கள் விரும்புகிறோம் என ஷியாவின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் புக்கல் நவாப் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்பொழுது, 2019 தேர்தலுக்கு பின்னர் மோடிஜி மீண்டும் பிரதமராக வருவதற்கு ஷியா சமூகத்தினர் ஒன்றிணைந்து பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவு வழங்குவர். பாரதீய ஜனதா கட்சி தவிர்த்து வேறு எந்த அரசியல் கட்சியும் ஷியா பிரிவினரின் நலன்களை காக்கவில்லை என கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உத்தர பிரதேச தலைநகரில் ஷியா பிரிவினர் பேரணி நடத்துவதற்கு இருந்த 20 வருட தடையை நீக்க உதவினார். மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி, மாநில மந்திரி மோஹ்சின் ரசா, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் சையத் கயோருல் ஹசன் ரிஸ்வி, உத்தர பிரதேச சிறுபான்மை ஆணைய தலைவர் ஹைதர் அப்பாஸ் ஆகியோருக்கு பாரதீய ஜனதா அரசில் மதிப்பிற்குரிய பதவிகள் வழங்கப்பட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
முந்தைய பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சியின் ஆட்சிகளில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டனர். பல்வேறு அரசியல் கட்சிகள் கடந்த காலங்களில் ஷியா முஸ்லிம்களை நடத்திய விதத்தினால், இந்த முறை மோடிக்கு ஆதரவு வழங்குவது மற்றும் பாரதீய ஜனதா கட்சியின் வெற்றியை உறுதி செய்வது என்ற முடிவை எடுத்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தி தொடர்பு நிர்வாகி மவுலானா யசூப் அப்பாஸ் கூறும்பொழுது, நான் வெளியூரில் இருந்தேன். அதனால் இந்த விவரங்கள் பற்றி தெரியவில்லை. இது உணர்வுபூர்வ விசயம் என்பதனால் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஆலோசனை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.