அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., இந்திய அமைப்புகளை வகைப்படுத்தி உள்ளது. ஆர்.எஸ்.எஸ்.ஐ ‘தேசியவாத அமைப்பு’ என்று குறிப்பிட்டுள்ளது. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளை ‘தீவிரவாத மதக்குழுக்கள்’ என்று வகைப்படுத்தி உள்ளது.
இதற்கு விசுவ இந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் மூத்த தலைவர் சுரேந்திர ஜெயின் கூறுகையில், ‘‘விசுவ இந்து பரிஷத் ஒரு தேசியவாத அமைப்பு. நாட்டு நலனுக்காக செயல்பட்டு வருகிறது. எனவே, சி.ஐ.ஏ.வின் கருத்து அடிப்படை ஆதாரமற்றது, பொய்யானது. சி.ஐ.ஏ. மன்னிப்பு கேட்டு, தனது தவறை சரிசெய்ய வேண்டும். சி.ஐ.ஏ., இந்தியாவுக்கு எதிராகவே நீண்ட காலமாக செயல்பட்டு வருவது, எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஒசாமா பின்லேடனை உருவாக்கிய சி.ஐ.ஏ.வுக்கு, பயங்கரவாதம் பற்றி உபதேசிக்க தார்மீக உரிமை இல்லை’’என்றார். அமெரிக்காவிற்கு எதிராக உலகளாவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இவ்விவகாரத்தில் அமெரிக்காவிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில் அமெரிக்க தூதரகம் முன்னதாக போராட்டம் நடத்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் முயற்சி செய்தார்கள். அவர்களை தடுத்து நிறுத்தி போலீஸ் கைது செய்தது. அவர்கள் அமெரிக்காவுற்கு எதிராகவும், சிஐஏவிற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். இருப்பினும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் தரப்பில் போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. நாங்கள் பேரணியாக சென்று எங்களுடைய கோரிக்கை அறிக்கையை தாக்கல் செய்யவே சென்றோம், ஆனால் போலீஸ் தடுத்துவிட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள். மாறாக போலீஸ் தரப்பில் இது மிகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட பகுதியாகும், இங்கு எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்க தூதரத்திற்கு முன்னதாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.