அகிலேஷ் யாதவ் அதிரடி தாக்கு..!
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்து அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து உத்தரப்பிரதேச முன்னாள் முதல்மந்திரிகளான, முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ், ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை கடந்த சில தினங்களுக்கு முன் காலி செய்து அரசிடம் ஒப்படைத்தனர்.
அகிலேஷ் யாதவ் அரசு பங்களாவை காலி செய்த போது அங்கு இருந்த விலை உயர்ந்த பொருட்களை எடுத்துசென்று விட்டதாகவும், பங்களாவின் சமையல் கூடம், சைக்கிள் ஓட்டும் இடம், பூங்கா உள்ளிட்ட இடங்களை அவர் சேதப்படுத்தி விட்டதாகவும் பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ், ‘உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் சந்தித்த தோல்விகளை ஜீரணிக்க முடியாமல் பா.ஜ.க.வினர் என் மீது அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
எனது அரசு பங்களாவில் நீச்சல் குளமே இல்லை, ஆனால், நான் அதில் இருந்த டைல்ஸ்களை எடுத்து சென்றுவிட்டேன் எனவும் நீச்சல் குளத்தை சேதப்படுத்தி விட்டேன் எனவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதலில் உ.பி. அரசு, எனது பங்களாவிற்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டது என மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
உடற்பயிற்சி சாதனங்கள் மற்றும் பேட்மிண்டன் மைதானத்தில் இருந்த இருந்த பொருட்கள் நான் வாங்கியது. எனவே, நான் அதை எடுத்து சென்றதில் என்ன தவறு உள்ளது ? மாநில ஆளுநர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
கவர்னர் ராம் நாயக்கிற்கு ஆர்எஸ்எஸ் ஆன்மா இருப்பதால், அரசியல் சாசன சட்டப்படி செயல்பட வேண்டிய அவர், திடீர் என இந்த விவகாரத்தில் அளவுக்கு அதிகமாக ஆர்வம் காட்டுகிறார்’ என தெரிவித்துள்ளார்