மின்சாரம் தாக்கி பசு மாடு பலி…!!
தாராபுரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் பசுமாடு பலியானது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ளது வினோபா நகர். இங்கு 200க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உயர்அழுத்த மின் கம்பம் ஒன்று கடந்த 15 நாட்களுக்கு முன் பெய்த மழையால் சாய்ந்தது. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் கம்பத்தை உடனே மாற்ற போதிய ஆள்வசதி இல்லை என கூறி மின் இணைப்புடன் அறுந்து கிடந்த மின் கம்பியை மட்டும் ஓரமாக எடுத்து வைத்து விட்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் வியாழனன்று ரவிச்சந்திரன் என்பவரது பசுமாடு மேய்ச்சல் முடிந்து வந்த போது இணைப்புடன் இருந்த மின் கம்பி மாட்டின் மீது உரசியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானது. மாட்டை காப்பாற்ற சென்ற உமா (25) என்பவரையும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியதில் அவர் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு குடியிருப்புவாசிகள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின் இணைப்பை துண்டிக்குமாறு தகவல் கொடுத்தும் தாமதமாக வந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியரை சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதை துண்டிக்காமல் மெத்தனமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் உரிய இழப்பீடடை மின்வாரியம் வழங்க வேண்டும் என பொது மக்கள் ஆவேசத்துடன் கூறினர்.
DINASUVADU