கொலைவழக்கில் ராக்கெட் ராஜாவுக்கு வலைவீசும் போலீஸ்..!

Default Image

நாடார்மக்கள் சக்தி அமைப்பின் தலைவர் ராக்கெட் ராஜா உள்ளிட்ட 9 பேரை நெல்லையில் கொடியன் குளம் குமாரின் மருமகன் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக   காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கொடியன்குளத்தை சேர்ந்தவர் குமார். அதிமுக பிரமுகரான இவர் பாளையங்கோட்டை அடுத்த அண்ணா நகரில் உள்ள தோட்டத்து வீட்டில் தனது மருமகன் செந்தில் குமாரிடம் பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று குமார் மீது வெடி குண்டு வீசி கொலை செய்ய முயன்றது. கொடியன் குளம் குமார் தப்பி ஓடியதால் அவரது மருகனுக்கு வெட்டு விழுந்தது.  கல்லூரி பேராசிரியரான செந்தில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அஸ்வின், ராஜசேகரன் ஆகிய இருவர் சரண் அடைந்துள்ளனர். கொடியன் குளம் குமாரின் ஆதரவாளரான விஜி என்பவர் சில மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட நிலையில் அதற்கு பழிக்கு பழி வாங்க திட்டமிட்டதால் கொடியன் குளம் குமாரை தீர்த்துகட்ட முயன்றதில் அவரது மருமகன் செந்தில் குமார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த கொலைக்கு பின்னணியில் கொடியன் குளம் குமார் செய்து வந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதமும் ஒரு காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட ராக்கெட் ராஜா, நாடார் மக்கள் சக்தி அமைப்பின் தலைவராக இருப்பவர். இவரின் சித்தப்பா கார்த்தீசன் என்பவர் அண்மையில் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரம் முடித்ததாக கூறப்படுகின்றது. 5 பேரிடம் இருந்து வாங்கப்பட்ட அந்த நிலத்துக்கு முழு தொகையும் குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்கப்படவில்லை என்றும், ஒரு கட்டத்தில் ராக்கெட் ராஜா தலையிட்டதால் மீதி பணத்தை அவர்கள் கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே ராக்கெட் ராஜாவை தான் கவனித்து கொள்வதாக கூறியதால், கார்த்தீசனுக்கு விற்கப்பட்ட நிலத்தை மீண்டும் கொடியன் குளம் குமார் பெயருக்கு 5 பேரும் பவர் பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர்.

ஏற்கனவே ராக்கெட் ராஜாவுக்கும், கொடியன் குளம் குமாருக்கும் சமுதாய ரீதியாக அங்கு பனிப்போர் இருந்து வந்த நிலையில், இந்த நிலப்பிரச்சனையால் அது நேரடி மோதலாக உருவானதாக கூறப்படுகிறது. எனவே அவரது ஆதரவாளர்கள் தான் கொடியன் குளம் குமாரை கொலை செய்திருக்கவேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் ராக்கெட் ராஜா, அவரது சகோதரர்கள் வழக்கறிஞர் பாலகணேஷ், பாலமுருகன் உள்ளிட்ட 9 பேர் மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய விசாரணை அதிகாரிகளான லிஸ்டர் , இனியன் ஆகியோர் கொடியன்குளம் குமாரின் வீட்டில் இருந்து விசாரணையை தொடங்கி உள்ளனர் .

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்