நெல்லையில் பயங்கரம்.. பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை.! 6 பேரிடம் தீவிர விசாரணை.!
திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர், பாஜக இளைஞரணி பொது செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார். இவர் நேற்று இரவு 9 மணியளவில் தனது வீட்டருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்தபோது, மர்ம கும்பல் ஒன்று ஜெகனை அரிவாள் போன்ற கூரிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது.
இதில் படுகாயமுற்ற ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தை அடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை போலீசார், தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடிவருகின்றனர். இதில் தற்போது வரை 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெகன் மீது பல ஆண்டுகளுக்கு முன்பு ஓர் கொலை குற்றத்தில் 7வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட வழக்கு ஒன்று இருந்துள்ளது. அண்மையில் ஒரு திருவிழா சமயத்தில் ஓர் தகராறு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையும் கருத்தில் கொண்டு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.