நெல்லை உடையார்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். தனியார் நிறுவன ஊழியரான இவர் நகைகள் செய்து விற்பனை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார் நண்பர்களுடன் நெல்லை மணிமூர்த்தீசுவரம் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு சென்றார்.அங்கு ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அவர்கள் மது குடித்ததாக தெரிகிறது. பின்னர் அவர்கள், ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது அங்கு திடீரென 3 மோட்டார் சைக்கிளில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள், சுரேஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் சுரேஷ்குமாரை சரமாரியாக தாக்கினர்.
இதை பார்த்த அவரின் நண்பர்கள் நம்பிராஜன், ரகுராமகிருஷ்ணன் ஆகியோர் அவர்களை தடுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் அவர்களையும் தாக்கியது.பின்னர் 3 பேரையும் தூக்கி சுரேஷ்குமாரின் காருக்குள் போட்டனர். சுரேஷ்குமாரிடம் இருந்த சாவியை வாங்கி காரை ஓட்டிச்சென்றனர். சிறிது தூரம் சென்றதும் சுரேஷ்குமார், ரகுராமகிருஷ்ணன் ஆகியோர் காரில் இருந்து குதித்தனர். நம்பிராஜனால் குதிக்க முடியவில்லை.
டக்கரம்மாள்புரம் பகுதியில் சென்றபோது, நம்பிராஜனை அந்த கும்பல் கீழே தள்ளிவிட்டு காரை அந்த கும்பல் கடத்திச்சென்றது. தாக்குதலில் படுகாயம் அடைந்த சுரேஷ்குமார், நம்பிராஜன், ரகுராமகிருஷ்ணன் ஆகியோர் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுரேஷ்குமாரை அந்த கும்பல் தாக்கியதற்கு காரணம் என்ன? அவர்களுக்குள் வேறு ஏதாவது முன்விரோதம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், காரை கடத்திச்சென்ற அந்த கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.