” அதிக மதிப்பெண் எடுத்தால் போதாது ” தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்…துணை வேந்தர் பேச்சு..!!
நெல்லை,
“மாணவர்கள் படிக்கும் போதே தங்களுடைய தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் கூறினார்.
முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா
நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 என்ஜினீயரிங் படிப்புகள் உள்ளன. இதில் 225 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். அதேபோல் எம்.பி.ஏ. படிப்பில் 41 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. அண்ணா பல்கலைக்கழக நெல்லை மண்டல டீன் சக்திநாதன் தலைமை தாங்கினார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களை அனைவரையும் வாழ்த்துகிறேன். மாணவர்கள் கவனமாக படிக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுத்தால் மட்டும் போதாது. மாணவர்கள் தங்கள் படிக்கும் பாடங்களை புரிந்து படிக்க வேண்டும். அப்படி படித்தால் தான் அறிவில் வளர்ச்சி ஏற்படும். மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். சரியான நேரத்துக்கு கல்லூரிக்கு வர வேண்டும். நீங்கள் படிக்கும் படிப்பு, சமுதாயத்துக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் சிந்தனை திறன் அவசியம். மாறி வரும் உலகத்துக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தகவல் பரிமாற்றம் மிகவும் அவசியமானது. மாணவர்கள் படிக்கும் போதை தங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக் கொண்டால் தான், போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நீங்கள் வளர்ச்சி அடைய முடியும் என்று நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் கூறினார்..
DINASUVADU