தமிழகத்தில் குரங்கம்மை.? திருச்சி ஏர்போர்ட்டில் களமிறங்கிய அமைச்சர்கள்.!
தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு மற்றும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து திருச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
திருச்சி : ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் குரங்கம்மை குறித்து உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் குரங்கம்மை குறித்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாநில அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. தமிழகத்திலும் பன்னாட்டு விமான நிலையங்களில் அதற்கான சோதனை என்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இன்று திருச்சி விமான நிலையத்தில் அவர் ஆய்வு மேற்கொண்டார். உடன் அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் ஆய்வில் கலந்துகொண்டனர்.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கம்மை நோய் பரிசோதனை குறித்து ஆய்வு நடத்தினோம். தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளுக்ம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெப்பநிலை பரிசோதனைமானி கொண்டு காய்ச்சல் குறித்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
WHO ஆல் பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ள குரங்கம்மை காய்ச்சலுக்கான நடவடிக்கை திருச்சி, சென்னை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நான்கு அரசு மருத்துவமனைகளில் அதற்கென தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு வார்டிலும் பத்து படுக்கைகள் கொண்ட மருத்துவ வசதிகள் எப்போதும் தயார் நிலையில் உள்ளன.” என்று தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பேசினார்.