வாரத்திற்கு ஒரு முறை நூலகம் செல்லவேண்டும் : பொது நூலக இயக்குனர் பேச்சு
திருச்சி மாவட்டம் துறையூர் கிளை நூலகத்தில் 50வது தேசிய நூலகவார விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கிளை நூலக வாசகர் வட்டம், துறையூர் காவல் நிலையம் காவல் நிலையம், சிறுவர் மன்றம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இணைந்து வாகன ஓட்டுநர்கள் வாழ்க்கை பயணம் தொடர என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. வாசகர் வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். நூலகர் பாலசுந்தரம் வரவேற்றார்.
பொது நூலக இயக்குநர் கண்ணப்பன் கலந்து கொண்டு பேசும்போது, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வாரத்திற்கு ஒரு நாளாவது நூலகம் சென்று படிக்க வைக்க வேண்டும். இல்லையெனில் ஒருமணி நேரமாவது தவறாமல் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அவர் கூறினார்.
விழாவில் மருத்துவர் விஜயகுமார் பேசுகையில், ஓட்டுனர்கள் தங்கள் உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, புத்தகம் படிப்பதால் நல்ல மனநிலையுடன் இருந்து ஓட்டுநர்கள் வாகனத்தை நிதானமாக சீரான வேகத்தில் இயக்க முடியும் என்றார். மேலும் அவர் நூலகத்திற்கு ரூ.10,000க்கான காசோலை நன்கொடையாக வழங்கினார்.
துறையூர் இன்ஸ்பெக்டர் மனோகரன் வாகன விழிப்புணர்வு வாசக பிரதியை வெளியிட்டு பேசுகையில், ஓட்டுநர்கள் சாலை விதிகளை சரியாக பின்பற்றி மது அருந்தாமல் வாகனத்தை ஓட்டினால் விபத்தில்லா நாட்டை உருவாக்க முடியும் என்றார். மாவட்ட நூலக அலுவலர் சிவகுமார், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டர். இதற்கான ஏற்பாடுகளை நூலகப்பணியாளர்கள் சரஸ்வதி, உமாமகேஷ்வரி, சாந்தி திலகவதி, கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.