திருச்சி:ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் உபயநாச்சியார்களுடன்..!! நெல் அளவு கண்டருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது..!!
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவிலில் வசந்த உற்சவ விழா கடந்த 21-ந்தேதி தொடங்கியது. தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோவிலில் வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்தடைந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
கோவிலில் நேற்று முன் தினம் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு வந்தபோது தீப்பந்தத்தில் இருந்து வெட்டிவேர் தோரணத்தில் தீப்பொறி பட்டு தீப்பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தீ உடனடியாக அணைக்கப்பட்டதுடன் அதற்கான புண்ணியாசன பூஜையும் நடந்தது. தொடந்து நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் விழாவின் 7-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் நெல் அளவு கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது மூலஸ்தானத்தில் இருந்து உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் புறப்பட்டு கோவில் கொட்டாரத்தில் நெல் அளவு கண்டருளினார். அப்போது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் நம்பெருமாள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வசந்த உற்சவ விழா நிறைவு நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து சந்திரபுஷ்கரணி கரையில் தீர்த்தவாரி, திருமஞ்சனம் கண்டருளி வசந்த மண்டபம் வந்தடைவார். இரவில் புறப்பட்டு மூலஸ்தானத்திற்கு சென்றடைவார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்