தூத்துக்குடி : பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், இன்று 2 நாள் சுற்று பயணமாக தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளார்.
இன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பல்வேறு திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் துணைமுதல்வர் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை முடிந்த பிறகு, குறிச்சி நகர் மெயின்ரோட்டில் உள்ள மைதானத்தில் தமிழக அரசின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.
அதில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் மழை வெள்ளத்தால் வீடுகள் சேதமடைந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு பொருட்கள் வழங்குதல் என பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். பலருக்கும் அயன்பாக்ஸ், ஸ்கூட்டர், புதிய குடும்ப அட்டை, இலவச தையல் மிஷன், மருத்துவ காப்பீடு திட்ட அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நலத்திட்டங்களை வழங்கிய பிறகு, உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.