துப்பாக்கி சூடு : கல்வி தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க..!! தூத்துக்குடி CPIM வேண்டுகோள்..!!
தூத்துக்குடி;
ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய போது காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினர், ஊனமடைந்தவர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்து விதி முறைகளை மீறி செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே 22 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அபோது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டவர்கள் குண்டு காயங்கள் அடைந்து சிகிச்சை பெற்றனர். இவர்களில் 9 பேர் நிரந்தரமாக ஊனமடைந்ததாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும், குண்டு காயம் அடைந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கும் வேலை வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தின. தமிழக முதல்வரும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என அறிவித்தார்.ஆயினும் வேலை கொடுப்பதில் மிக காலதாமதமும் இழுத்தடிப்பும் செய்யப்பட்டது.
துப்பாக்கிச் சூடு நடந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு செப்டம்பர் 27 அன்று துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 10 பேரின் குடும்பத்தில் தலா ஒருவருக்கும், நிரந்தரமாக ஊனமடைந்ததாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் கிராம உதவியாளர் சத்துணவு உதவியாளர், வேலை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் பட்டதாரிகளாகவும் உள்ளனர். இவர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணியாணை வழங்கி இருக்க வேண்டும். அதற்கு மாறாக கல்வி தகுதிக்கு குறைந்த வேலை வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதற்கு முன்னர் தூத்துக்குடியில் இது போன்ற சம்பவங்களில் கல்விக்கு தகுந்த வேலை வழங்கப்பட்ட முன் உதாரணம் உள்ளது. இது நாள் வரை கல்வித் தகுதிக்கு ஏற்றபடி வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தவர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்டுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு மறுபரிசீலனை செய்து கல்வித் தகுதிக்கு தகுந்தபடி வேலை வழங்க வேண்டும்.
மேலும் துப்பாக்கிச் சூட்டில் குண்டு காயமடைந்தவர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். துப்பாக்கி சூட்டில் குண்டு காயம் அடைந்த அனைவருக்கும் தமிழக அரசு, அரசு வேலை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
DINASUVADU