தூத்துக்குடி எம்ஜிஆர் பூங்காவில் உள்ள ஸ்டெர்லைட் விளம்பரங்களை தார் பூசி அழித்த வழக்கறிஞர்கள் …!
ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தூத்துக்குடி பகுதிகளில் செய்யப்பட்ட சமூகப் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள போர்டுகளில் வழக்கறிஞர்கள் தார் பூசி மறைத்தனர்.
தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது.ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது. ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அங்குள்ள மரத்தடியில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போராட்டம் இன்று 53-வது நாளாக நீடிக்கிறது.
பல தரப்பினர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கமும் போராட்டக் களத்தில் குதித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் இன்று, தூத்துக்குடி மாநகரில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் போர்டுகளில் தார் பூசினர். இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், “தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை மக்களுக்குப் பேராபத்தை தொடர்ந்து ஏற்படுத்திவருகிறது. இதை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தியும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க போலீஸார் அனுமதி மறுத்தநிலையில், நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.