ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிகட்டு நடத்த அனுமதி மறுப்பு ?
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு நடந்ததில்லை எனக் கூறி மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிபதி பாரதிதாசன் முன்பு நடந்த இந்த வழக்கின் விசாரணையின்போது ஆஜரான அரசுத்தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தில் சில இடங்களில் முறையான அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதி, முறையான அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என கருத்து தெரிவித்தார்.
இதற்கு முன் , ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், ஜல்லிக்கட்டு அரசாணையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், பிப்ரவரி 25-ஆம் தேதி, ஸ்ரீவைகுண்டத்தில் பட்டா நிலத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி. ஆகியோரிடம் டிசம்பர் மாதமே மனு அளித்தும் அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்பட்டிருந்தது. அந்த மனு கடந்த 15-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை ரத்து செய்து, ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி பாரதிதாசன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு குறித்த அரசாணையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில், ஸ்ரீவைகுண்டம் இடம்பெறவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜல்லிக்கட்டு அரசாணையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது…
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …