தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் காரணம் முதலமைச்சர் நடவடிக்கை – அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மாசுகட்டுப்பாட்டுவாரியம் மூலம் முதல் அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் பொதுமக்கள் போராட்டம் 60 வது நாளாக தொடர்ந்து வருகிறது.
தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குமார ரெட்டியாபுரம் பொதுமக்கள் 60 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மக்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை கடந்த 25 ந்தேதி முதல் தாமிர உற்பத்தியை மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்காண மாசுகட்டுப்பாட்டுவாரியத்தின் தடையில்லா சான்று கடந்த மாதம் 31 ந்தேதியுடன் காலாவதியான நிலையில் அதனை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது ஸ்டெர்லைட் நிர்வாகம் அளித்த பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் மேலும் சில வினாக்களை எழுப்பிய மாசுகட்டுப்பாட்டு வாரியம், தடையில்லா சான்றை புதுப்பிக்க மறுத்து விட்டது. இதனால் ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் தாமிர உற்பத்தியை தொடர முடியவில்லை. பராமரிப்பு பணிகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் சமாளித்து வந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூலம் முதல் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கையால் ஸ்டெர்லை ஆலை நிரந்தரமாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும், பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்
ஆனால் அரசுக்கும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும், தவறான தகவல் கொடுத்துள்ள ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை ரகசியமாக இயக்கி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மேலும் தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சர் தெரிவித்தபடி ஸ்டெர்லைட் ஆலை உண்மையாகவே மூடப்பட்டுள்ளதா? என்பதை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உறுதியான அதிகார பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.