தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சிகப்பு கொடி காட்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம்…!
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி மறுத்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், விரிவாக்கப் பணிகளை தடுக்கக் கோரியும் அ.குமரெட்டியாபுரம் மக்களின் போராட்டம் நேற்று 57-வது நாளாக தொடர்ந்தது. பொதுமக்களின் இப்போராட்டத்துக்கு திமுக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதற்கிடையில் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதிக் காலம் முடிந்தது. தொடர்ந்து இயங்க அனுமதிக்கக் கோரி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஆலை நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது. அதே போல், விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமும் விண்ணப்பித்திருந்தது. போராட்டத்தின் தாக்கத்தால், ஆலை விரிவாக்கத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்நிலையில், தற்போது ஆலையை தொடர்ந்து இயக்கவும் தற்போது தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி மறுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் கிராமத்தில் இயங்கி வரும் வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அலகு- 1 ஐ மார்ச் 31-ம் தேதிக்குப்பின் தொடர்ந்து நடத்த விண்ணப்பித்திருந்தது. அந்த விண்ணப்பத்தை பரிசீலித்தபோது, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை அக்குழுமம் சரிவர நிறைவேற்றவில்லை. இதனால், ஏப்ரல் 9-ம் தேதி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட குறிப்பாணை மூலம், வேதாந்தா குழுமத்தின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது என்று வாரியத்தின் தலைவர் முகமது நசிமுத்தின் தெரிவித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.