இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவண சுரேஷ் (50)கடந்த வெள்ளிக்கிழமை காலை தீக்குளித்தார். 100 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
தனது மருமகன் தீக்குளித்தது வைகோவை வெகுவாக பாதித்தது. மருத்துவமனையில் மருமகனைப் பார்த்துக் கதறி அழுதார். “என்னுடைய மனைவி ரேணுகாதேவியின் உடன்பிறந்த அண்ணன் ராமானுஜத்தின் மகன் சரவண சுரேஷ். மதிமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றுகின்றவர். தேர்தல் காலங்களில் எல்லாம் என்னுடனேயே இருப்பார்.
சரவண சுரேஷின் திருமணத்தை நான்தான் நடத்தி வைத்தேன். அவரது மூத்த மகன் ஜெயசூர்யா மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மகள் ஜெயரேணுகா விருதுநகரில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்.
மதிமுக நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் வந்து எனது உறவினர் என்று காட்டிக்கொள்ளாமலும், முன்னிலைப்படுத்திக் கொள்ளாமலும் கட்சி நலனையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார். கடந்த சில நாட்களாக நான் நியூட்ரினோ நடைப்பயணம் மேற்கொண்டபோதும், அங்கும் வந்தார்.
பிரதமர் மோடி வருகையை எதிர்த்து வியாழக்கிழமை நான் ஆற்றிய உரையை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு மிகவும் மனம் உடைந்து கவலையாகவே இருந்திருக்கிறார். ஆசிரியையாகப் பணியாற்றும் அவரது மனைவி அமுதா, “ஏன் கவலையாகவே இருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “மாமா பேச்சைக் கேட்டு மனசே சரியில்லை” என்று சொல்லி உள்ளார்.
இன்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து நான் நடக்கப்போகிறேன் என்று கூறி வெளியே சென்று, சூலக்கரை அருகே உடல் எங்கும் மண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடலின் பெரும்பகுதி எரிந்துபோன நிலையில், என் மருமகனை தற்பொழுது மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்கிறார்கள்.
உயிர் பிழைப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போல எங்கள் குடும்பமே கதறி நிற்கிறது. யாருக்கு நான் ஆறுதல் கூற முடியும்?” என்று வைகோ கூறியிருந்தார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த சரவண சுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்கள் மரியாதைக்காக கோவில்பட்டிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் மாலை 6 மணி அளவில் கோவில்பட்டி அருகே உள்ள பெருமாள் பட்டி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.