கர்பப்பையில் 7 கிலோ அளவுள்ள கட்டியை அகற்றி சாதனை படைத்த தூத்துக்குடி மருத்துவர்கள்…!!

Default Image

தூத்துக்குடி  அண்ணாநகர் 9 வது தெருவைச்  சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது  மனைவி மாரியம்மாள் (51). இவர், கடந்த பல  ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமடையவில்லை. இதற்காக ஏராளமான பணத்தை செலவழித்து மனமுடைந்த மாரியம்மாள், கடைசியாக கடந்த 5ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்,  மாரியம்மாளின் கர்பப்பையில் 7 கிலோ அளவுள்ள கட்டி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, மருத்துவக் கல்லூரி முதல்வர் கனி அறிவுரையின்பேரில், மகப்பேறு பிரிவு தலைமை மருத்துவர் கோமதி, தலைமையிலான மருத்துவர்கள், மாரியம்மாள் கர்பப்பையில் இருந்த கட்டியை அறுவைச் சிகிச்சை மூலம்  அகற்றினர். இதுகுறித்து மருத்துவர் கோமதி  கூறியதாவது: மாரியம்மாள்  தனது வயிற்றில் இருப்பது கட்டி எனத் தெரியாமல் கடந்த பல  ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
தூத்துக்குடி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்த அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இறுதியாக தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, மாரியம்மாள் வயிற்றில் இருந்த புற்றுநோய் அல்லாத 7 கிலோ அளவிலான கட்டி அகற்றப்பட்டது. இது போன்ற அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்ய வேண்டுமென்றால் 1 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றார். இதுகுறித்து மாரியம்மாள் கூறுகையில்,  ‘பல  ஆண்டு பிரச்னைக்கு தற்போதுதான் தீர்வு கிடைத்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்தபிறகு வயிறு வலி தெரியவில்லை. நல்ல முன்னேற்றம் தெரிகிறது’ என்றார். இந்த மருத்துவ குழுவில் மயக்க நிபுணர் முத்து செண்பகம், மருத்துவர்கள் தையூபா கான், முத்து லெட்சுமி, அனிதா காத்ரின் ப்ரீத்திமா, சிறுநீரக  நிபுணர் சரவண ராஜா ஆகியோர் இருந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்