திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் – மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை…!!
திருவள்ளூர் மாவட்ட கடலோர பகுதிகளில், பலத்த காற்று வீசுவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 800 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் எண்ணூர், பழவேற்காடு, திருவெற்றியூர் ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக கோரைக்குப்பம், அரங்கம் குப்பம், களங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசிவருகிறது. இதனால் அந்த பகுதிகளில் கடல் சீற்றம் அதிக அளவில் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக இந்த பகுதிகளில் உள்ள மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.